டெல்லி:மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கது என்றும் வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான அடித்தளமிடும் பட்ஜெட் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், இந்த பட்ஜெட் நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து, ஏழைகள், நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகளின் கனவுகளை நிறைவேற்றும். இந்த வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்டுக்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினை வாழ்த்துகிறேன். இந்தியாவின் கனவுகளை நனவாக்குவதில் நடுத்தர சமூகம் மிகப் பெரிய சக்தியாக உள்ளது.
இந்த சமூகத்தை மேம்படுத்த எங்கள் அரசாங்கம் பல முடிவுகளை எடுத்துள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் வெற்றியை விவசாயத்துறையிலும் பிரதிபலிக்க வேண்டும் என்று அதற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பை திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது கிராமப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு மையப்புள்ளியாக அமையும்.
உள்கட்டமைப்பில் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு என்பது மிகப்பெரும் வளர்ச்சிக்கான வேகத்தையும் புதிய ஆற்றலையும் அளிக்கும். கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் பெண்களின் வாழ்க்கையை எளிதாக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மகளிர் சுயஉதவி குழுக்களை மேலும் மேம்படுத்தும். குடும்பங்களில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க சிறப்பு சேமிப்பு திட்டம் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பட்ஜெட் எதிரொலியால் விலை உயரும் பொருட்கள் விபரம்