டெல்லி: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில், எல்லைப் பகுதியான காசா நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. அதேநேரம், இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும், பலர் தங்களது குடும்பம், வீடு, உடமைகளை இழந்து உள்ளனர். இவர்களுக்காக தற்காலிக முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, இந்தியர்கள் பலர் இந்த போரில் சிக்கித் தவிப்பதாக வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சகம், இஸ்ரேலுக்கான இந்திய தூதரகத்தின் உதவி உடன் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியது. இதன் விளைவாக ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்தியா முழுமையாக ஈடுபட்டது.
இந்த நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து முதலாவதாக 212 இந்தியர்கள் நேற்று இரவு ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் இந்தியாவுக்கு புறப்பட்டனர். இதனையடுத்து, இன்று (அக்.13) காலை டெல்லி விமான நிலையத்தில் வந்து தரையிறங்கிய விமானத்தில் இருந்து வந்தவர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார். அப்போது அவர், தாயகம் திரும்பிய இந்தியர்களுக்கு கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “இஸ்ரேலில் தவிக்கும் எந்த ஒரு இந்தியரைக் கூட விடுவதற்கு நமது நாட்டிற்கு விருப்பமில்லை. நமது அரசு, நமது பிரதமர், ஒவ்வொரு இந்தியரும் தங்களது சொந்த வீடுகளுக்கு பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறார். இந்த நேரத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக குழுவினரையும் நான் மனதார பாராட்டுகிறேன்” என்றார்.
இவ்வாறு தாயகம் திரும்பிய இந்தியர்கள், தங்களது உறவுகளைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் சத்தம் போட்டனர். மேலும், இது குறித்து தாயகம் திரும்பிய இந்தியர் ஒருவர் பேசுகையில், “நாங்கள் முதல் முறையாக இப்படியான சூழலை அங்கு (இஸ்ரேல்) பார்த்தோம். நாங்கள் இந்திய அரசுக்கு நன்றியைக் கூறிக் கொள்கிறோம்.
அதிலும், நாங்கள் தாயகம் திரும்பியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மீண்டும் அங்கு அமைதி நிலவும் என்று நம்புகிறோம். அதேநேரம், மிக விரைவில் இஸ்ரேல் திரும்புவோம்” என கூறினார். மேலும், 18,000 இந்தியர்கள் இன்னும் இஸ்ரேலில் உள்ளதாக வெளியுறத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இனி 3 மணிநேரத்தில் நாகை - இலங்கை பயணம்... சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த செரியாபாணி பயணிகள் கப்பல்!