மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, சம்பாபதி நகரில் பாருய்பூர் கிராமத்தின் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பட்டாசுக் கடைகள் இயக்கி வந்தது. இந்த கடைகளில் தற்போது வருகிற தீபாவளிக்காக புது புது வகையான பட்டாசுகள் விற்பனைக்காக வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று (நவ-4) காலை வழக்கம்போல் கடையைத் திறக்க வந்த பட்டாசு உரிமையாளர் கடைகளிலிருந்து புகை வெளியேறுவதைக் கண்டு உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.
அதற்குள் கடைக்குள் இருந்த பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. சிறிது நேரத்தில் அருகிலிருந்த கடைகளுக்கு தீ பரவியதால், அப்பகுதியே பட்டாசு சத்தத்தில் அதிர்ந்தது. சுமார் அரை மணி நேரமாகப் பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
தகவலறிந்து மூன்று தீயணைப்பு வாகனத்துடன் சென்ற தீயணைப்புத்துறையினர், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் வெடித்து சாம்பலாயின. இவ்விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, எனினும் மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் காலை நேரம் என்பதால் உயிர் சேதம் எதுவும் நல்வாய்ப்பாக ஏற்படவில்லை.