மும்பை: மசூதிகளில் உள்ள கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை மே3ஆம் தேதிக்குள் (அதாவது இன்று) மாநில அரசு அகற்றாவிட்டால் ஒவ்வொரு மசூதி முன்பும் ஹனுமன் சாலிஸா ஓதுவோம் என மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே அதிரடியாக அறிவித்தார்.
இது மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ராஜ் தாக்கரேவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. இதற்கிடையில் நேற்று (மே2) மாநில உள்துறை அமைச்சர் பாட்டீல் காவல் துறை உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக மும்பையில் மே1ஆம் தேதி நிகழ்ச்சியொன்றில் பேசிய உத்தவ் தாக்கரே, “மாநிலத்தில் புதிய வாய்ச்சொல் வீரர்கள் முளைத்துள்ளனர். மக்கள் அவர்களை கண்டுகொள்ள மாட்டார்கள்.
ஏனெனில் அவர்களின் அரசியல் விளையாட்டு மராத்தி, இந்துத்துவா என மாறிமாறி தொடங்குகிறது. மேலும் இந்தப் பொழுதுபோக்கு காட்சிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போது மீண்டும் காணப்படுகின்றன” என எச்சரித்திருந்தார்.