பெங்களூரு :தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக கன்னட நடிகர் உபேந்திரா மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான "சத்யம்" படத்தின் மூலம் தமிழக ரசிகர்களிடையே பிரபலமானவர் உபேந்திரா. தொடர்ந்து கன்னட படங்களில் நடித்து வரும் அவர், அம்மாநிலத்தில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகிறார். அதேநேரம், அவ்வப்போது சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு சிக்கிக் கொள்வதை நடிகர் உபேந்திரா வழக்கமாக கொண்டு உள்ளார்.
இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து நடிகர் உபேந்திரா அவதூறு கருத்து வெளியிட்டதாக அவர் மீது பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் சமூக வலைதளத்தில் நேரலை வந்த நடிகர் உபேந்திரா குறிப்பிட்ட சமூக மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பூதாகரம் அடைந்த நிலையில், சமூக வலைதளத்தில் இருந்த வீடியோவை அவர் நீக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமூக நலத்துறை துணை இயக்குனர் மதுசூதன் என்பவர் நடிகர் உபேந்திரா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதையடுத்து நடிகர் உபேந்திரா மீது அச்சுகட்டு போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் உபேந்திரா மன்னிப்பு கோரி உள்ளார். இருப்பினும், சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவரை வசைபாடி வருகின்றனர்.
இதையும் படிங்க :ஜவான் படத்தில் நயன்தாராவின் ஹய்யோடா பாடல் நாளை வெளியீடு: ஷாருக் கொடுத்த தகவல்!