பாட்னா (பிகார்): பழைய அவசர ஊர்திகளுக்குத் திறப்பு விழா நடத்தியதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஈடிவி பாரத் செய்தியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர் உமேஷ் பாண்டே மீது காவல் துறை ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தச் செயலை மாநிலத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது.
கடந்த மே 15ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி சவுபே, பக்ஸரில் நடந்த அவசர ஊர்தி திறப்பு விழாவிற்குத் தலைமை தாங்கினார். ஆனால், அன்று அவர் தொடங்கி வைத்த அவசர ஊர்தி சேவைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் பழையது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
உடனடியாக களத்தில் இறங்கிய நமது ஈடிவி பாரத் செய்தியாளர் உமேஷ் பாண்டே தலைமையிலான குழு, சம்பவம் குறித்து கள ஆய்வுகளை மேற்கொண்டு தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்தது.
அதில் பழைய ஐந்து அவசர ஊர்திகளை அமைச்சர் திறந்து வைத்த நிகழ்வில் பயன்படுத்தப்பட்டதாக ஆதாரத்துடன் நமது தளத்தில் வெளியிடப்பட்ட செய்தி, பிகார் மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
களமாடிய ஈடிவி பாரத் செய்தி நிறுவனம்
திறப்பு விழா கண்ட வாகனங்கள் இன்னும் சாலைப் போக்குவரத்து விதிகளின்படி பதிவு செய்யப்படவில்லை என்பதையும், ஈடிவி பாரத் தோலுரித்து காட்டியுள்ளது. ஆம், பிஎஸ்-4 வாகனங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே தடை விதித்து, அதனை பதிவு செய்யவும் அனுமதிப்பதில்லை.
இவ்வேளையில் திறப்பு விழா கண்ட அனைத்து வாகனங்களும் பிஎஸ்-4 ரகத்தைக் கொண்டதாகவும், அதனை எப்படி அமைச்சர் தற்போது திறந்து வைத்திருக்க முடியும் எனவும் ஈடிவி பாரத்தின் செய்தி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது.
உடனடியாக செய்தியாளர் உமேஷ் பாண்டே மீது பாஜக தலைவர் பரசுராம் சதுர்வேதி காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன்படி, ஈடிவி செய்தியாளர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாகப் பேசிய பாஜக நிர்வாகி ராணா பிரதாப் சிங், "இந்த அவசர ஊர்திகள் முதல் முறையாக, மே 15 அன்று தான் தொடங்கி வைக்கப்பட்டன. அதற்கு முன்பு, பொது நலனுக்காக தற்காலிகமாக இந்த வாகனங்களின் திறப்பு விழா நடைபெற்றது" எனத் தெரிவித்தார்.
மக்களுக்கான செய்திகளை வழங்கும் ஈடிவி பாரத்
ஆளும் அரசின் இந்தச் செயலை கடுமையாக விமர்சித்து பேசிய ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் ஜக்தானந்த் சிங், "பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை ஈடிவி பாரத் ஊடகம் தொடர்ந்து அளித்து வருகிறது.
கங்கையில் பிணங்கள் மிதந்து வருவதை, இதே செய்தி நிறுவனம் தான் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து, பொது மக்களின் நன்மதிப்பை பெற்றது. எப்போதும் மக்களுக்குத் தேவையான செய்திகளை அளித்து மக்களுடன் இருக்கும் இதுபோன்ற ஊடகங்களை அல்லது ஊடகவியலாளர்களை ஆளும் அரசு முடக்க நினைப்பது பெரும் தவறாகும்.
பக்ஸரில் ஈடிவி பாரத் செய்தியாளர் உமேஷ் பாண்டேவுக்கு எதிராக, முதல் தகவல் அறிக்கை(எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்ததை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. அவருடன் எப்போதும் எங்கள் கட்சி உறுதுணையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பு: ஈடிவி பாரத் செய்தியின் எதிரொலியாக, ஆளும் அரசின் இந்தச் செயல் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வந்தாலும், நாங்கள் அளித்த உண்மை செய்தியில் இருந்து, பின்வாங்கப் போவதில்லை என, ஈடிவி பாரத் குழுமம் முடிவெடுத்துள்ளது.