கண்ணூர் :கேரள மாநிலம் கண்ணூர் அருகே முதலமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களை கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பினர் கடுமை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கலையசேரி தொகுதிக்குட்பட்ட பழையங்காடி அடுத்த எரிபுரம் பகுதியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு திரும்பிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் கருப்பு கொடி காண்பித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து, அங்கிருந்த கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பினர் (DYFI ) இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
ஹெல்மட் மற்றும் இரும்பு ராடு உள்ளிட்ட உபகரணங்கள் கொண்டு கடுமையாக தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பினர் (DYFI ) 14 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது வயர்லெஸ் செட் கொண்டு தாக்குதல் நடத்திய காவல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் தெரிவித்து உள்ளனர். இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்தும், அதையும் மீறி கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.