டெல்லி:உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்யா-உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அங்குச் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு 'ஆபரேஷன் கங்கா' செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்திவருகிறது.
அதன்படி, இதுவரை உக்ரைனிலிருந்து வெளியேறிய நான்கு விமானங்கள் தாயகம் வந்தடைந்த நிலையில், இன்று 249 இந்தியர்களைச் சுமந்துகொண்டு ஐந்தாவது விமானம் ரோமானியா தலைநகர் புகாரெஸ்டிலிருந்து புறப்பட்டது. இதனை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது உக்ரைன்-ரஷ்ய இடையே அதீத பதற்றம் நிலவிவரும் நிலையில், இந்தியர்கள் யாரும் அலுவலர்களின் ஒருங்கிணைப்பு இல்லாமல் எல்லைப் பகுதியைக் கடக்க வேண்டாம் என கீவ்வில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.