லுசைல்: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற்று வருகின்றது. லீக் மற்றும் கால் இறுதி ஆட்டங்கள் முடிந்த நிலையில், அர்ஜென்டினா, குரேஷியா, பிரான்ஸ், மொராக்கோ அணிகள் நாக் அவுட் சுற்றான அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
முதலாவது அரையிறுதியில் அர்ஜென்டினா - குரேஷியா அணிகள் மோதுகின்றன. இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினாவின் வேகத்திற்கு குரேஷியா ஈடுகொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கிளம்பி உள்ளது.
இதுவரை 5 ஆட்டங்களில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி உள்ள நிலையில், அதில் அர்ஜென்டினா மற்றும் குரேஷியா தலா இரு வெற்றி பெற்றுள்ளன. ஒரே ஒரு ஆட்டம் மட்டும் டிராவில் முடிந்துள்ளது.
தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவிய அர்ஜென்டினா அணி அதன்பின் எந்த ஆட்டத்திலும் தோற்கவில்லை. அதேநேரம் அர்ஜென்டினா அணிக்கு நெருக்கடி கொடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேற குரேஷியா முயற்சிக்கும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
இதையும் படிங்க:உலக கோப்பை கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்