பாகு: ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் இறுதி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், உலக தரவரிசையில் முதல் இடத்திலும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் மோதி வருகின்றனர்.
இந்த இறுதி போட்டியானது இரு கிளாசிக்கல் ஆட்டத்தை கொண்டது. முதல் சுற்று 35 வது நகர்த்தலின் போது டிரா ஆனது. முதல் சுற்றில் வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா இரண்டாவது சுற்றில் கருப்பு நிற காய்களை கொண்டு விளையாடினார். இறுதி போட்டியின் இரண்டாவது சுற்று நேற்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. இந்த சுற்றில் வெற்றி பெறுபவர்கள் சாம்பியன் பட்டத்தை பெறுவார்கள்.
இறுதி போட்டி என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. வெள்ளை காய்களை கொண்டு விளையாடி வந்த மாக்னஸ் கார்ல்சென் நிதானமாக காய்களை நகர்த்தி வந்தார். 11வது நகர்த்தலின் போது இருவரும் குதிரைகளை பறி கொடுத்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு அதாவது 30வது காய் நகர்த்தலின் போது இருவரும் ஆட்டத்தை டிரா செய்ய ஒப்புக்கொண்டனர்.
இதையும் படிங்க:சந்திராயன்-3 திட்ட இயக்குனர் வீர முத்துவேலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!
ஏற்கனவே இருவரும் 0.5 - 0.5 புள்ளிகளுடன் இருந்த நிலையில், இந்த சுற்றும் டிராவானதால் அரை புள்ளிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் இருவரும் 1 - 1 என்ற புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். தொடர்ந்து இரண்டாவது சுற்றும் டிரா ஆனாதால், டைபிரேக்கர் மூலம் வெற்றியாளரை தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த டைபிரேக்கர் சுற்று இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. “ரேபிட்” முறையில் நடைபெறும் டைபிரேக்கரில் இரு ஆட்டங்களில் விளையாடுவார்கள். ஒவ்வொறு வீரருக்கும் தலா 25 நிமிடங்கள் வழங்கப்படும். அதேநேரம் ஒவ்வொறு காய் நகர்த்தலுக்கும் தலா 10 வினாடி அதிகரிக்கப்படும்.
இதிலும் சமநிலை தொடர்ந்தால் 10 நிமிடங்கள் கொண்ட இரு ஆட்டங்களில் மோதுவார்கள். அதன்பிறகு 5 நிமிடம் அதன்பிறகு 3 என முடிவு கிடைக்கும் வரை ஆட்டம் தொடரும். உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்று பிரச்சினையில் அவதிப்பட்ட கார்ல்சென் அட்டம் முடிந்த பின்னர் கூறுகையில்; "பிரக்ஞானந்தா ஏற்கனவே பலமிக்க வீரர்களுடன் பல டைபிரேக்கர் ஆட்டத்தில் விளையாடி இருக்கிறார்.
அவர் மிகவும் வலுவான எதிராளி என்பதை அறிவேன். நல்ல உடல்தகுதியுடன் சாதகமான நாளாக அமைந்தால் எனக்கு வெற்றி வாய்ப்பு உண்டு. டாக்டர்கள், நர்சுக்கள் எனக்கு நல்ல சகிச்சை அளித்தார்கள். முந்தய நாளை விட நன்றாக உணர்ந்தாலும், களத்தில் போராடுவதற்கு உரிய ஆற்றலுடன் இல்லை. எனக்கு ஒய்வுபெற அதிகமாக ஒருநாள் கிடைத்துள்ளது. அதனால் நல்ல உடல்தகுதியுடன் திரும்புவேன் என்று நம்புகிறேன்" என்றார்.
பிரக்ஞானந்தா கூறுகையில்; "இவ்வளவு விரைவாக கார்ல்சென் டிரா செய்வார் என்று நான் நினைக்கவில்லை. அவர் டிரா செய்யும் நேக்குடனேயே விளையாடினார். எனக்கும் அது நல்லது தான். நாளைய தினம் வெற்றிக்காக நான் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன். அதன் பிறகே ஒய்வு எடுப்பேன்" என்றார். இதில் சாம்பியன் பட்டத்தை பெறும் வீரருக்கு 91 லட்ச ரூபாயும், 2வது இடத்தை பிடிக்கும் வீரருக்கு 66 லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க:Ind Vs Ire 3rd T20 : வருண பகவான் திருவிளையாடல்.. இந்திய அணிக்கு சாதகமே!