ஹிமாச்சலபிரதேசம்:ஹிமாச்சலபிரதேசத்தில் நேற்று(ஆகஸ்ட் 13) முதல் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் சுழ்ந்துள்ளது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனிடையே சோலன் மாவட்டத்தில் ஜடோன் என்ற கிராமத்தில் நேற்று இரவு மேக வெடிப்பு காரணமாக பெருமழை கொட்டியது. திடீரென கொட்டிய கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. குறிப்பாக இரண்டு வீடுகள் மற்றும் ஒரு கால்நடைத் தொழுவம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நேற்று நிலவரப்படி இந்த பெருமழையில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேரிடர் மீட்புப் படையினர் ஜடோன் கிராமத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இன்று(ஆகஸ்ட் 14) காலையில் மாயமான மேலும் இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டதாக பேரிடர் மீட்புப் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், பெருமழையில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில், ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியாகி உள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.