வடக்கு 24 பரக்னாஸ்:மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், அங்கு பணியாற்றி வந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேற்குவங்க மாநிலம் தத்தாபுகூர் மாவட்டத்தில், சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் 6 பேர் உடல் சிதறி பலியாயினர். வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், அதிக அளவில் பட்டாசுகள் குவிக்கப்பட்டு இருந்ததால், வெடிவிபத்து பாதிப்பின் தாக்கம் மிகவும் கோரமாக இருந்ததாக, அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.
பலரின் உடல்கள் அருகில் உள்ள கட்டடங்களின் மேற்புறங்களிலும், அந்த வளாகத்தில் உள்ள மரங்களிலும் சிதறிக் கிடப்பதாக கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்புப் படையினருடன் இணைந்து அப்பகுதி பொதுமக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். விரிவான விசாரணைக்குப் பின்னரே, வெடிவிபத்திற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். கடந்த மே மாதம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தின் ஏக்ரா பகுதியில் சட்டவிரோதமாக, குடியிருப்புப் பகுதிக்குள் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 8 பேர் பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டேங்கர் லாரி - ரோல்ஸ் ராய்ஸ் கார் மோதி கோர விபத்து... தனியார் குழும இயக்குனர் உள்பட 3 பேர் படுகாயம்!