பஞ்சாப்:பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்கு அங்குள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
பேராசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக மாணவிகள் சிலர் பஞ்சாப் மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாகவும், இது தொடர்பாக நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பல்கலைக்கழகத்தில் உள்ள தற்போதைய ஒழுங்காற்றுக் குழு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று மாணவிகள் குற்றம் சாட்டி உள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வரும் பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் மாணவிகள் அக்கடிதத்தில் கோரிக்கை வைத்து உள்ளனர்.
ஆளுநருக்கு அனுப்பப்பட்டு உள்ள அந்த கடிதத்தில் புகார் தெரிவிக்கும் மாணவிகளின் பெயர்கள், எங்கிருந்து அனுப்பி உள்ளார்கள் உள்ளிட்ட எந்த விபரங்களும் குறிப்பிடப்படவில்லை. தங்களது பெயர்களை குறிப்பிட்டால் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தால் தங்களுக்கு பிரச்சினை ஏற்படலாம், தங்களது கல்வி பாதிக்கப்படலாம் என எண்ணி மாணவிகள் தங்களது அடையாளத்தை மறைத்து உள்ளதாக தெரிகிறது. அதேபோல், குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர்களின் பெயர்களும் அதில் குறிப்பிடப்படவில்லை.
இந்த புகார் கடிதம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மாணவிகள் மீதான பாலியல் சுரண்டல் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் இந்த குற்றச்சாட்டை பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம் நிராகரித்து உள்ளது. இது பல்கலைக்கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி என்று பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்து உள்ளார். அதேநேரம் இந்த கடிதம் தொடர்பாக ஆளுநர் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், மாணவிகள், மதுரை சரக டிஐஜியை நேரில் சந்தித்து புகார் அளித்ததால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "மணிப்பூர் விவகாரத்தில் மன்னிப்பு கிடையாது"... உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!