ஹைதராபாத்: முன்பெல்லாம், கடன் வாங்குவதில் பல சிரமங்கள் இருந்தன. ஆனால், இப்போது சில நிமிடங்களில் கடன் பெற்றுவிட முடிகிறது. வங்கிகளும் டிஜிட்டல் முறையில் உடனடியாகவும் எளிதாகவும் கடன் வழங்குகிறது. இப்படி எளிதாக கடன்தொகை கிடைத்துவிடுவதால், அதில் உள்ள சாதக பாதகங்களைக் கருத்தில் கொள்ளாமல் வாடிக்கையாளர்கள் கடன் வாங்குகின்றனர். இந்த கடனால் பிற்காலங்களில் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதிக வட்டியை செலுத்துவது மட்டுமல்லாமல், கிரிடிட் ஸ்கோரையும் இழக்கின்றனர். ஆகவே, டிஜிட்டல் லோன் வாங்குவதற்கு முன்பாக நீங்கள் சிலவற்றை கருத்தில்கொள்ள வேண்டும். அவை பின்வருமாறு.
இன்றைய காலகட்டத்தில், நீங்கள் கேட்காமலேயே டிஜிட்டல் சலுகைகள், கடன்கள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளரின் ஆசையை தூண்டி கடன் வழங்கப்படுகிறது. ஏனென்றால், ஒருவரை நேரிலோ, வங்கியிலோ சென்று சந்திகாமலேயே போனில் அழைத்து கடனை வழங்க முடிவதால் வங்கிகளும், கடன் வழங்கும் நிதி நிறுவனங்களும் போட்டிப்போட்டுக்கொண்டு கடன்களை வழங்குகின்றன.
'டிஜிட்டல் லெண்டிங்' என்பது ஆன்லைன் அல்லது ஆப்ஸ் மூலம் தனிநபர் கடன்கள் பெறுவதாகும். இதன் மூலம் பல்வேறு தனியார் கடன் நிறுவனங்கள் சில நிமிடங்களில் கடன் வாங்குபவர்களின் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்துவிடுகிறது. இதனால், சிந்திக்க கூட நேரமிருப்பதில்லை. நீங்கள் வாங்கும் கடன் மீதான வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் முழு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தெரிந்துகொண்ட பின்பே கடன் வாங்க வேண்டும்.
முதலில், உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை, எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். கடன் வாங்கும் போது, உங்களது வருமானம் மற்றும் செலவினங்கள் குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டும். இந்த கடனுக்கான செயலாக்க கட்டணம், முன்பணம் செலுத்துதல், தாமதமாக செலுத்தினால் விதிக்கப்படும் கட்டணம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள வேண்டும்.