டெல்லி:ஹைதராபாத் எம்.பி.,யும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM)கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசியின் அதிகாரப்பூர்வ வீடு, டெல்லி அசோகா சாலை பகுதியில் அமைந்து உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13ஆம் தேதி) மாலை வேளையில், மர்ம நபர்கள், ஓவைசியின் வீடு மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில், அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்து உள்ளன. இதுதொடர்பாக, டெல்லி போலீசாரிடம், ஓவைசி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி கூறியதாவது, “ஆகஸ்ட் 13ஆம் தேதி, அசாதுதீன் ஓவைசியின் வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி இருப்பதாக, எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, நாங்கள் ஒரு குழுவாக, சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டோம். அங்கு வீட்டின் ஜன்னலில் இருந்த கண்ணாடிகள் உடைந்த நிலையில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.
ஜன்னலின் கண்ணாடிகள் அப்போது உடைந்ததா அல்லது முன்னரே உடைந்து இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம். இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஓவைசியின் வீடு அமைந்து உள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாக”, அவர் குறிப்பிட்டு உள்ளார்.