பிகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தின் சிர்ஹூலி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் பாஸ்வான். இவர் தனது மகள் ஜோதியுடன் (13) பிழைப்புக்காக ஹரியானா மாநிலத்திற்குச் சென்று ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்துவந்தார். இதற்கிடையில், விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்த அவர் நடக்கும் சக்தியை இழந்தார். இதனால், குடும்பம் நடத்துவதற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சமயத்தில்தான் கடந்தாண்டு கரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
1200 கி.மீ சைக்கிள் பயணம்
பணக்கஷ்டத்தினால், குடியிருந்த வீட்டிற்கும் வாடகை கட்ட முடியாமல் போனதால், இருவரும் சொந்த ஊரான பிகாருக்கு செல்ல முடிவு செய்தனர். வீட்டுச்செலவுக்காக இருந்த 500 ரூபாயைக் கொண்டு, மிதிவண்டி ஒன்றை ஜோதி வாங்கியுள்ளார். அதில் தனது தந்தையை அமர வைத்துக்கொண்டு சுமார் 1200 கி.மீ., தூரத்தை எட்டு நாள்களில் கடந்து வீட்டை அடைந்தார். சிறுமியின் இச்செயல் சொந்த ஊரைத் தாண்டி அமெரிக்கா வரை பேசப்பட்டது.