சமஸ்திபூர்: பிகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் நேற்றைய முன்தினம் (ஜுலை 25), மதுபானம் குடிக்க மனைவி 100 ரூபாய் தர மறுத்ததால், குடிபோதையில் தந்தை தனது மூன்று வயது மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அன்று மாலை, பிகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தின் மொஹியுதீன் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட படையா கிராமத்தில் நடந்து உள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட குந்தன் சாஹ்னி அன்று மாலை, குடிபோதையில் வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் 100 ரூபாய் கேட்டு உள்ளார். ஆனால், மனைவி பணம் தர மறுத்து உள்ளார். இதனால் கோபம் அடைந்த குந்தன் சாஹ்னி, மனைவி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். ஒரு கட்டத்தில் சாஹ்னி தனது மனைவியை கத்தியால் தாக்க முயன்றதால், இந்த விஷயம் வெளியில் தெரிய வந்ததாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்து உள்ளனர்.
கணவர் ஏதாவது செய்து விடுவார் என்ற பயத்தில், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, மனைவி அந்த இடத்தை விட்டு ஓடி விட்டார். இந்த நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மூன்று வயது மகனைத் தாக்கிய சாஹ்னி, அவனது கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த கொடூர தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சிறுவன், அப்பகுதி மக்களின் உதவியால் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.