கோலார்:கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தின் பங்காரபேட் தாலுகாவில் போடகுர்கி என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவரது மகள், கங்காதர் (24) என்ற இளைஞரை காதலித்து வந்து உள்ளார். ஒரு கட்டத்தில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்து உள்ளனர்.
இதனையடுத்து, அப்பெண் தனது தந்தை கிருஷ்ணமூர்த்தியிடம் தனது காதல் குறித்து கூறி உள்ளார். இதற்கு, ‘நீ காதலித்து வரும் நபர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே, இந்த காதல் திருமணத்தை ஏற்க முடியாது. ஆகவே, நீ அந்த நபர் உடன் பழகுவதை நிறுத்தி, அவனிடம் இருந்து விலகி இரு.
அதேநேரம், அவனை மறந்து விடு’ என அப்பெண்ணின் தந்தை தெரிவித்து உள்ளார். ஆனால், இதனை ஏற்காத அப்பெண், தொடர்ந்து கங்காதர் உடன் தனது காதலை வளர்த்து வந்து உள்ளார். இந்த செய்தி பெண்ணின் தந்தை கிருஷ்ணமூர்த்திக்கு தெரிய வந்து உள்ளது.
இதனையடுத்து, இது குறித்து தனது மகளிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, தனது மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார். இந்த நிலையில், இது குறித்து அறிந்த காமசமுத்ரா காவல் துறையினர், கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
மேலும், அவரை கைது செய்த காவல் துறையினர், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் காதலர் கங்காதரன் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதற்கும் தற்கொலை தீர்வல்ல முன்னதாக கர்நாடகாவின் தும்கூரு மாவட்டத்தில் வசித்து வந்த 17 வயது சிறுமி விடுதியில் தங்கி இருந்த பழங்குடியின இளைஞர் ஒருவரை காதலித்து வந்து உள்ளார். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் குடும்பத்தினர், காதலை கைவிடுமாறு கூறி உள்ளனர். இருப்பினும், தனது காதலை சிறுமி தொடர்ந்ததால், சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இணைந்து சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளனர்.
ஆனால், தனது மகள் தற்கொலை செய்து விட்டதாகக் கூறி இறுதிச் சடங்கையும் செய்துள்ளனர். இதனையடுத்து, சிறுமியின் குடும்பத்தினரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட, இது குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதன் பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மகளை ஆணவக்கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் தந்தை, சகோதரர் மற்றும் மாமா ஆகிய 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பழங்குடி சிறுவனை காதலித்த சிறுமி ஆணவக்கொலை.. கர்நாடகாவில் நடந்தது என்ன?