தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பேச்சுவார்த்தை என்ற பெயரில் மத்திய அரசு குழப்ப முயற்சிப்பது பயனற்றது' - ராகுல் காந்தி - விவசாயிகள் தூதுக்குழுவிற்கும் இடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தை

டெல்லி : நாடு முழுவதும் போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கை என்ன என்பது தெரிந்தும், பேச்சுவார்த்தை என்ற பெயரில் மத்திய அரசு குழப்ப முயற்சிப்பது பயனற்றதென காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Farmers want withdrawal of farm laws: Rahul Gandhi
“பேச்சுவார்த்தை என்ற பெயரில் மத்திய அரசு குழப்ப முயற்சிப்பது பயனற்றது” - ராகுல் காந்தி

By

Published : Jan 12, 2021, 4:19 PM IST

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களான அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020, வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, உழவர்களுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்றையும் எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள் இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் மாதத்திலிருந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, பாரதிய கிசான் யூனியன் உள்ளிட்ட 32 விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகரை முற்றுகையிட்டுப் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம், டெல்லி புராரி பகுதியில் 48 நாள்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

நாடு முழுவதும் இதுவரை 62க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக்களங்களிலும், தற்கொலை செய்தும் உயிரிழந்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக 18 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்திவருகின்றன. தொடர்ந்து போராட்டங்கள் அதிகரித்துவருவதால், நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதே போராட்டக் களத்தில் நிற்கும் விவசாய அமைப்புகளின் ஒரே கோரிக்கையாக உள்ளது. அதனை ஏற்க மத்திய அரசு மறுப்பதால் தொடர்ந்து கொந்தளிப்பான நிலை நீடித்துவருகிறது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும், விவசாயிகள் தூதுக்குழுவிற்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இருப்பினும், அந்தப் பேச்சுவார்த்தைகளில் இன்றுவரை தீர்வை எட்டமுடியவில்லை.

“பேச்சுவார்த்தை என்ற பெயரில் மத்திய அரசு குழப்ப முயற்சிப்பது பயனற்றது” - ராகுல் காந்தி

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, “நாடு முழுவதும் போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கை என்ன என்பது தெரிந்தும், பேச்சுவார்த்தை என்ற பெயரில் மத்திய அரசு தொடர்ந்து குழப்ப முயற்சிப்பது பயனற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் போராட்டத்தை, ஆண்டாண்டு காலமாக புறக்கணிக்கப்பட்ட சமூகத்தின் கொந்தளிப்பாகவே கருத வேண்டும். பல ஆண்டுகளாக, அரசு விவசாயத் துறை புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. நடந்து வரும் போராட்டங்களை அவர்கள் எதிர்கொள்ளும் துயரங்களின் பின்னணியில் புரிந்து கொள்ளப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி 15ஆம் தேதியன்று, ‘கிசான் அதிகார திவாஸ்’ என்ற பெயரில், மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெறு அல்லது பதவி விலகு என மத்திய அரசை நோக்கிய முழக்கத்தை முன்வைத்து, அனைத்து மாநில/யூனிய பிரதேசங்களில் உள்ள ஆளுநர் மாளிகைகளை காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, “விவசாயிகள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும். மத்திய அரசாங்கம் அவ்வாறு செய்யாவிட்டால் நாங்கள் அந்த மூன்று புதிய சட்டங்களுக்கு தடை விதிப்போம்" என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க :திருமணமாகவிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details