டெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 200 நாள்களை நெருங்கும் உழவர்களின் போராட்டத்தை தீவிரப்படுத்த ஜூன் 26இல் நாடு முழுவதுமுள்ள ஆளுநர் மாளிகைகளில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதில் கறுப்புக் கொடிகளும் காண்பிக்கப்படும்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கும் ஒரு குறிப்பாணை அனுப்பப்படும். பாரதிய கிசான் யூனியன் தலைவர் தர்மேந்திர மாலிக், "ஜூன் 26ஆம் தேதியை 'வேளாண்மையைக் காப்போம், ஜனநாயகத்தைக் காப்போம்' என்று கொண்டாடுவோம்" என்று கூறினார்.
"அதேசமயம் ஆளுநர் மாளிகைகளில் கறுப்புக் கொடிகளைக் காட்டி ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு குறிப்பாணை வழங்குவதன் மூலம், 'நாங்கள் எங்கள் போராட்டத்தை நடத்துவோம்'" எனவும் அவர் குறிப்பிட்டார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு இது குறித்து வேளாண் தலைவர்கள் தெரிவிக்கையில், "ஜூன் 26 அன்று, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை விதித்திருந்தார். இன்றும்கூட, மோடி அரசு நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலையை விதித்துள்ளது" என்றனர்.
இதற்கிடையில், எல்லையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து உழவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். போராட்டம் நடைபெறும் இடத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக சனிக்கிழமைக்குள் ஒரு குழு அமைக்கப்படும் என்று உழவர்கள் தெரிவிக்கின்றனர்.
உழவர்கள் பாஜக தலைவர்களுக்கு எதிராகப் பல்வேறு இடங்களில் கறுப்புக் கொடிகளைக் காட்டி தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு கைதலில் ஹரியானாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் கமலேஷ் தண்டா கறுப்புப் கொடிகள், கோஷங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. இதேபோல் பாஜகவின் பபிதா போகாட் சார்க்கி தாத்ரியில் உழவர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டார்.