சமீபத்தில் இயற்றப்பட்ட புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் 21ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த மனுக்களின் மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "குறிப்பிட்ட சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் அவற்றுக்கு எதிராக போராடுவதும் அடிப்படை உரிமை.
விவசாயிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், ஆனால் அது வன்முறையற்றதாக இருக்க வேண்டும். அரசும் விவசாயிகளும் முறையாக பேச்சுவாரத்தை நடத்தினால் இது முடிவுக்கு வரும். இதற்காக அரசு தரப்பு, விவசாயிகள் தரப்பு மற்றும் சாய்நாத் போன்ற வல்லுநர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கவுள்ளோம்.
புதிய வேளாண் சட்டங்கள் செல்லுப்படியாகுமா இல்லையா என்பதை நாங்கள் இன்று விசாரிக்கவில்லை. போராடுவது குறித்தும் அதற்கான உரிமை குறித்தும் மட்டுமே இன்று விசாரித்துள்ளோம்" என்றனர்.
இதையும் படிங்க: இந்திய வரலாற்றில் முதல்முறையாக... சிபிஐ அமைப்பு மீதே வழக்குப்பதிவு!