மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தால் ரூ. 1200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்திருந்தது.
இதனிடையே, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று எச்சரித்த விவசாயிகள், ரயில் நிலையங்களில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளனர். இருந்தபோதும், ரயில் மார்க்கங்களில் நடைபெற்று வரும் போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர்.
இது குறித்து பஞ்சாப் அரசு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தின் 21 ரயில் நிலையங்களில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள், சரக்கு ரயில்களை இயக்க அனுமதித்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் ட்வீட் வெளியிட்டுள்ள ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், "ரயில்வே துறையின் பாதுகாப்பை பஞ்சாப் அரசு உறுதி செய்ய வேண்டும். தீபாவளி, சாத் பூஜை, குர்புராப் உள்ளிட்ட பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் செல்ல பஞ்சாப் மக்கள் விரும்புகின்றனர். எனவே, பஞ்சாப் வழியாக அனைத்து ரயில்களையும் இயக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.