சவாய் மாதோபூர் (ராஜஸ்தான்): மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடு தழுவிய அளவில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயித் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் என்ற இடத்தில் கிசான் மகாபஞ்சாயத் நடைபெற்றது. இதில், ராகேஷ் திகாயிட் கலந்து கொண்டு விவசாயிகள் மத்தியில் பேசுகையில், "வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிபடுத்த வேண்டும் எனக் கூறியிருந்தோம்.
விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், வேளாண் துறை அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என மத்திய அரசு கூறியது. ஆனால் தற்போது வரை அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. குழு பற்றிய முழுமையான விவரங்கள், குழுவில் இடம்பெற போகும் மத்திய அரசு அலுவலர்கள் பெயர், குழுவின் அதிகாரம் என்ன என எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அரசு விவரங்களை கூறி தெளிவுபடுத்தாத வரை நாங்கள் பெயர்களை வெளியிட மாட்டோம்" என்றார்.
தீவிர போராட்டம் நடத்தப்படும் :மத்திய அரசு விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்து பிச்சைக்காரர்களாக்கியுள்ளது எனக் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், அரசியல் கட்சிகளால் நாடு காப்பாற்றப்படாது, மாறாக புரட்சியால் காப்பாற்றப்படும். அனைவரும் தயாராகுங்கள். டிராக்டர்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் பிரம்மாண்ட பேரணி நடத்துவதற்கான தேதி, இடம் வரும் நாள்களில் அறிவிக்கப்படும் என்றார்.