ஹரித்வார் : மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டக் களத்திற்கு விரைந்த பாரதிய விவசாய சங்கத்தின் தலைவர் நரேஷ் டிகாயிட், வீரர், வீராங்கனைகளிடம் இருந்து பதக்கங்களை பெற்றுக் கொண்டார். மேலும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க 5 நாட்கள் அவகாசம் வழங்குமாறு மல்யுத்த வீரர் வீராங்கனைகளிடம் கோரினார்.
இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி ஜந்தர் மந்தர் சாலையில் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதிய நாடாளுமன்றம் கடந்த 28ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், தங்களுடைய புகார் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி புதிய நாடாளுமன்ற கட்டட வளாகத்தின் முன் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
திறப்பு விழா நாளில் நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட முயன்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது டெல்லி போலீசார் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், அவர்களை குண்டுக் கட்டாக தூக்கிச் சென்றனர். மேலும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது டெல்லி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், பாலியல் புகார் விவகாரத்தில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யாவிட்டால், நாட்டுக்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் தூக்கி வீச உள்ளதாகவும், இந்தியா கேட் பகுதியில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அறிவித்தார்.