போபால் (மத்தியப் பிரதேசம்):மத்தியப் பிரதேச மாநிலம் பனா மாவட்டம் கிருஷ்ண கல்யான்பூர் பகுதியைச் சேர்ந்த லோகன் யாதவ் (45) எனும் விவசாயி ஒருவர் அவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்திலிருந்து 14.98 கேரட் வைர கல் ஒன்றை கண்டெடுத்துள்ளார்.
பனா மாவட்டத்தில் வைர கல் ஏலம் விடப்பட்டதில், யாதவ்வின் வைர கல் 60 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் சஞ்சய் மிஷ்ரா கூறுகையில், "மொத்தமாக 269.16 கேரட் கொண்ட 203 வைர கற்கள் ஏலம் விடப்பட்டன. இதில், 131 கற்கள் மட்டுமே தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள கற்கள் அடுத்த ஆண்டு ஏலம் விடப்படும். கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஏலத்தில் குறைந்த அளவிலான வர்த்தகர்களே கலந்துகொண்டனர்" என்றார்.