கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியின் எல்லை பகுதிகளில் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். சர்வதேச அளவில் இப்பிரச்னை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் குறித்த அமெரிக்காவின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா இது குறித்து மேலும் கூறுகையில், "அமெரிக்காவின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கப்படும். எந்த நோக்கத்தில் கருத்து தெரிவிக்கப்படுகிறதோ அதனை அப்படியே முழுமையாக ஏற்று கொள்வது முக்கியத்துவம் பெறுகிறது.
வேளாண்துறையில் இந்தியா மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களை அமெரிக்கா ஒப்புக்கொள்கிறது. இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகள், அரசியல்சூழல், பிரச்னையை தீர்க்க அரசு மற்றும் சம்பந்தப்பட்ட விவசாய குழுக்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இம்மாதிரியான போராட்டங்களின் நோக்கங்களைப் பார்க்க வேண்டும்.