டெல்லி:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவிய நிலையில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் ரன் அவுட்டானதையும், கடந்த 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அப்போதைய இந்திய கேப்டன் டோனி ரன் அவுட் செய்யப்பட்டதையும் ஒப்பிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.
8-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று(பிப்.24) கேப்டவுனில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது.
இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டும் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி தொடரை விட்டு வெளியேறியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (52ரன்), ரோட்ரிக்ஸ் (43ரன்) ஜோடி அணியை நல்ல நிலையில் கொண்டு சென்ற போதும் தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகள் சரி வர செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ரன் அவுட் ஆனது பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்தடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்நிலையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் ரன் அவுட் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.