ஹைதராபாத்: பாலாஜி ஹேச்சரிஸ் (Balaji Hatcheries) நிறுவனத்தின் தலைவர் தொழிலதிபர் சுந்தர் நாயுடு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை (ஏப்.28) காலமானார்.
இளமை வாழ்க்கை: ஆரம்ப காலங்களில் கால்நடை மருத்துவராக பணியாற்றிய சுந்தர் நாயுடு பின்னாள்களில் ஆந்திராவின் முன்னணி தொழிலதிபராக உயர்ந்தார். ஆந்திர மாநிலம் சித்தூர் தவனம்பல்லே தாலுகாவில் உள்ள கம்பலபல்லே என்ற கிராமத்தில் 1936ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி கோவிந்து நாயுடு-மங்கம் மாலா இணையருக்கு மகனாக பிறந்தார்.
இந்தத் தம்பதியருக்கு சுந்தர் நாயுடுவுடன் சேர்த்து மொத்தம் 5 குழந்தைகள். சுந்தர் நாயுடு தனது ஆரம்ப கல்வியை டி.புத்தூர் பள்ளியிலும், உயர் கல்வியை அரகோண்டா இசட்பி பள்ளியிலும், கல்லூரியை திருப்பதி எஸ்.வி., கலைக் கல்லூரியிலும் முடித்தார்.
கால்நடை மருத்துவர் பணி: தொடர்ந்து பாம்பே கால்நடை பல்கலைக்கழகத்தில் (பிவிஎஸ்சி) கால்நடை மருத்துவப் படிப்பை முடித்தார். இதையடுத்து, சித்தூரில் கால்நடை மருத்துவராக தனது பணியை தொடர்ந்தார். இந்த நிலையில், 1964ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி பெம்மசானி சுஜேவானா என்ற பெண்ணை மணந்தார். இவர் சித்தூர், அனந்த்ப்பூர் மற்றும் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் கால்நடை மருத்துவராகப் பணிபுரிந்தார்.