தெலுங்கானா:பல அற்புதமான படங்களைக் கொடுத்து கலாதபஸ்வி என்று அழைக்கப்பட்ட புகழ்பெற்ற தெலுங்கு இயக்குனர் விஸ்வநாத் (92) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். கடந்த சில ஆண்டுகளாவே வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த அவருக்கு, நேற்று இரவு திடீரென ஏற்பட்ட உடநலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
கடந்த 50 ஆண்டுகளாக திரையுலகில் முத்திரை பதித்த விஸ்வநாத், சலங்கை ஒலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயம் ஆனார். கடந்த 1930 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 தேதி ஆந்திராவில் பிறந்த இவர், குண்டூர் இந்துக் கல்லூரியில் இடைநிலைப் படிப்பையும், ஆந்திர கிறிஸ்தவக் கல்லூரியில் பி.எஸ்.சி.யையும் முடித்தார். இவரது தந்தை சென்னையில் உள்ள விஜயவாஹினி ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்தார்.
பட்டப்படிப்பை முடித்த விஸ்வநாத் அதே ஸ்டுடியோவில் ஒலிப்பதிவாளராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். முதன்முறையாக ’படால் பைரவி’ எனும் படத்தில் உதவி ஒலிப்பதிவாளராக பணியாற்றினார். பின்னர் 1965-ல் ‘ஆத்ம கௌரவம்’ எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே மாநில விருதான நந்தி விருது பெற்றார். தெலுங்கு மட்டும் ஹிந்தியிலும் படங்களை இயக்கியுள்ளார்.