மகள் தற்கொலை செய்து ஓராண்டு கடந்துவிட்ட பின்னரும், விசாரணையின் நிலை குறித்து உறுதியான தகவல் எதுவும் தெரியவில்லை என்றும், மத்திய புலனாய்வு அமைப்பு(சிபிஐ) விசாரணையில் நீதி நிலைநாட்டப்படவில்லை என்றும், லத்தீப் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை ஐஐடியில் படித்து வந்தவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப். இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி கல்லூரி விடுதியிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான(சிபிஐ) விசாரித்து வருகிறது.
மாணவி உயிரிழந்து ஓராண்டு கடந்தவிட்ட பின்னரும், விசாரணையில் நீதி நிலைநாட்டப்படவில்லை என்றும், விசாரணை நிலை குறித்து உறுதியான தகவல் எதுவும் சிபிஐயிடம் இருந்து தெரியவில்லை என்றும், மாணவியின் தந்தை லத்தீப் குற்றம் சாட்டியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமா லத்தீப் தந்தை அப்துல் லத்தீப், தனது மகள் மரணத்தில் எங்களுக்கு 13 சந்தேகங்கள் உள்ளன. எனவே இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து மாணவி உயிரிழப்பு தொடர்பாக, தமிழ்நாடு டிஜிபி அறிவுறுத்தலின்பேரில் ஐஐடி மாணவி பாத்திமா மரணம் குறித்த வழக்கை தமிழ்நாடு அரசு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணையின் தற்போதை நிலை என்ன என்பதை தெளிவுப்படுத்தக்கோரி, சிபிஐக்கு மாணவியின் தந்தை அனுப்பிய கடிதத்துக்கும் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என்பதை அப்துல் லத்தீப் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.