டெல்லி: குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படும் அரசியல் கட்சிகள் நாட்டின் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, ஒரு தேசிய கட்சி கூட அதற்கு இரையாகிவிட்டது என்று காங்கிரஸை மறைமுகமாக தாக்கினார். பிகார் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில், கட்சித் தொண்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது, “பாஜகவின் வெற்றிக்கான மந்திரம் அனைவரும் ஒன்றிணைந்து, அனைவருக்கும் முன்னேற்றம் மற்றும் நம்பிக்கை அளிப்பது (சப்கா சாத், சப்கா விகாஷ், சப்கா விஸ்வாஸ்) என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், “மக்கள் நேர்மையான பணிகள், வளர்ச்சிக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக தெரிவிக்கின்றன.
21ஆம் நூற்றாண்டில் தேசிய அரசியலில் வளர்ச்சிக்கான பாதையை மக்கள் விரும்புகின்றனர். நாட்டின் மீது பாஜக மீதும் பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை போற்றுகிறேன். தேர்தல் ஆணையம், பாதுகாப்பு படையினர் மற்றும் அரசு அலுவலர்களை பாராட்டுகிறேன். நீங்கள், தேர்தல் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடத்துவதை உறுதிசெய்துள்ளீர்கள்.