ஜபுவா:மத்திய பிரதேசத்தில் மாநில அரசு சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. தம்பதியருக்கு அரசு தரப்பில் சீர் வரிசை பொருட்களும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் ஜபுவா மாவட்டம் தண்ட்லா பகுதியில், முதலமைச்சர் மகளிர் திருமண திட்டத்தின் கீழ் 292 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் மணமக்களின் குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அரசு தரப்பில் விருந்தும் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தம்பதியருக்கு சீர் வரிசை பொருட்கள், மணமகள்களுக்கான பிரத்யேக மேக்-அப் பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன. இதில் மேக்-அப் பாக்ஸில், கருத்தடை மாத்திரைகள் இருந்ததால் திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையறிந்த சிலர், திருமண விழாவை ஏற்பாடு செய்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தம்பதியருக்கு இதுபோன்ற மாத்திரகளை வழங்கக் கூடாது என்றும், தகராறு செய்தனர். இதனால் திருமண விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வாக்குவாதம் செய்த பொதுமக்களை, அதிகாரிகள் சமரசம் செய்தனர்.
இதுகுறித்து திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், "மணமகள்களுக்கென பிரத்யேகமாக மேக் அப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டன. அதை திறந்து பார்த்த போது, சில அலங்காரப் பொருட்கள் இருந்தன. அவற்றுடன் 'MALA - N' கருத்தடை மாத்திரைகளும் இருந்தன. திருமணம் முடித்த தம்பதியருக்கு இதுபோன்ற மாத்திரைகளை வழங்கக் கூடாது. இதுபோன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபடுவது தவறானது" என்றனர்.