புலிட்சர் விருது பெற்றவரும், ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞருமான தானிஷ் சித்திக் (41) காந்தஹாரில் நடைபெற்ற தாலிபன் தாக்குதலில் நேற்று (ஜூலை.15) கொல்லப்பட்டார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தானிஷ் சித்திக்கின் குடும்பத்தினர் மறைந்த தங்களது மகனின் உடலை மீட்டு காந்தஹாரில் இருந்து டெல்லிக்கு கொண்டு வரக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் தானிஷ் சித்திக்கின் உடலை தங்களது மூதாதையர்களின் கல்லறையில் அடக்கம் செய்ய விரும்புவதாகவும் அவரது தந்தை அக்தர் சித்திக் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் போர் சூழலைப் பதிவு செய்து வந்த தானிஷ் சித்திக், காந்தஹாரின் ஸ்பின் போல்டக் மாவட்டத்தில் நடைபெற்ற தாலிபன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.