உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களம் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. முதல்கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் மூன்றே நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், முன்னணித் தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று பிஜ்னோர் பகுதியில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார். இருப்பினும் அங்கு நிலவும் வானிலை சூழல் காரணமாக பிரதமர் மோடியின் ஹெலிக்காப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து பிரதமர் காணொலி வாயிலாக தொண்டர்களிடம் உரையாற்றினர். அப்போது அவர் பேசுகையில், "நான் நேரில் வந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபடவிருந்தேன். இருப்பினும் சூழல் அதற்கு அனுமதிக்கவில்லை. இதற்காக உங்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். மக்களுக்கு தேவை வளர்ச்சி, வறுமையின் பிடியிலிருந்து விடுதலை.
இந்த பணிகளைத் தான் அரசு செய்ய வேண்டும். ஆனால், உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சியை போலி சமாஜ்வாதிகள் நீண்ட காலமாக தடுத்து நிறுத்தி வைத்திருந்தனர். இவர்கள் சாமானியர்களின் தேவைகளை ஒருபோதும் உணராதவர்கள். தங்கள் சொந்த செல்வத்தை பெருக்குவதிலேயே கவனம் கொண்டவர்கள். மாநிலத்தின் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் அவர்களின் சுயநலம் காரணமாக முடக்கப்பட்டது.
ஆனால் பாஜக தலைமையில் யோகி முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றதும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் எந்தவித மாறுபடும் இன்றி ஒரே சீராக வளர்ச்சி நடைபெற்றுவருகிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறைந்து, குற்றவாளிகள் அச்சம் காரணமாக தாமாகவே நீதியின் முன் சரணடைகின்றனர். பெண்களை பயத்திலிருந்து விடுதலை செய்து, அவர்களின் மரியாதையை யோகி ஆதித்யநாத் நிலைநாட்டியுள்ளார்" என்றார்.
இதையும் படிங்க:சிவசங்கருடனான தொடர்பு குறித்து ஒரு புத்தகம் எழுதத் தயார்- ஸ்வப்னா சுரேஷ்