கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் இருந்ததையடுத்து, பல மாநிலங்களில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டது. தன்னார்வலர்கள் பலரும் பிளாஸ்மா தானம் செய்ய ஆர்வமாக முன்வந்தனர். இதற்கு சமூக வலைதளம் பெரும் பாலமாக அமைந்தது.
இந்நிலையில், பிளாஸ்மா தானம் செய்வதாக அறிமுகமாகி, பணம் மோசடியில் ஈடுபட்டுவந்த கும்பலை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர்கள் அஜய் சங்கர் தியாகி, ஜெகதீஷ் பட்கரியா, மகேஷ் மவுரியா, ஹேமந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் நகரின் பல தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றியவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இந்தக் கூட்டத்தின் தலைவனாக அஜய் சங்கர் தியாகி செயல்பட்டுவந்துள்ளார்.
கிடைத்த தகவலின்படி, மனோஜ் என்பவர் காவல் நிலையத்தில் போலி பிளாஸ்மா தானம் குறித்து புகாரளித்துள்ளார். புகாரின்பேரில் விசாரணை தொடங்கிய காவல் துறையினர், தியாகி உள்பட நான்கு பேரைக் கைதுசெய்தனர்.
விசாரணையில், பிளாஸ்மா தேவைப்படும் நபர்களைக் கண்டறிந்து அவர்களிடம் நன்கொடையாளர்கள்போல் அறிமுகமாகி, பணத்தை ஆன்லைனில் அனுப்பச் சொல்லி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.