பொற்கோயில் அருகே பெரிய கண்ணாடி வெடித்து சிதறியதால் பரபரப்பு அமிர்தசரஸ்(பஞ்சாப்): பஞ்சாப் மாநிலம், அமிர்சரசில் பொற்கோயில் அருகே உள்ள பார்க்கிங்கில் நேற்று(மே.6) நள்ளிரவில் பெரிய கண்ணாடி ஒன்று திடீரென வெடித்து சிதறியது. அதிக சத்தத்துடன் கண்ணாடி வெடித்துச் சிதறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில், பார்க்கிங் அருகே உறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் சிலர் கண்ணாடி துண்டுகள் பட்டு காயமடைந்தனர்.
கண்ணாடி உடைந்ததற்கான காரணம் தெரியாததால், வெடிவிபத்து நடந்ததாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், கண்ணாடி வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அதில், பார்க்கிங்கிற்கு அருகே உள்ள உணவகத்திலிருந்து வெளியான வெப்பத்தால் கண்ணாடி வெடித்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். அந்த உணவகத்தின் சிம்னியிலிருந்து வெளியான அதிக வெப்பக்காற்று கண்ணாடியில் பட்டதால், இந்தச் சம்பவம் நடந்திருக்கும் என்றும், இது வெடிகுண்டு தாக்குதல் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, "நாங்கள் உறக்கத்தில் இருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. கண்ணாடி உடைந்து விழுந்ததும், என்ன நடந்தது என்றே எங்களால் உணர முடியவில்லை. சிலிண்டர் வெடித்ததா? அல்லது வெடிகுண்டு தாக்குதலா? என்று அஞ்சினோம். ஆனால், வெடிகுண்டு தாக்குதல் அல்ல என்று பிறகு தெரியவந்தது" என்றனர்.
இதையும் படிங்க: Karnataka Election : கர்நாடகாவில் பாஜக போட்டியிடவில்லை.. மக்கள் போட்டியிடுகிறார்கள்! - பிரதமர் மோடி!