ஹைதராபாத்:பஞ்சாப் மாநில அரசு அம்மாநில ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் 2023 நவம்பர் 10ஆம் தேதி வெளியிட்ட தீர்ப்பில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நீண்ட நாட்கள் நிலுவையில் வைத்து இருக்க முடியாது. அதை மீண்டும் சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு ஆளுநர் சட்டப்பேரவைக்கு மசோதாக்களைத் திருப்பி அனுப்பும் போது ஆலோசனை வழங்கலாம். ஆனால், அதை ஏற்றுக் கொள்வதும், அதனை மறுக்கும் அதிகாரம் சட்டப்பேரவைக்கே உள்ளது. மேலும், சட்டப்பேரவையில் அந்த மசோதா திருத்தங்கள் செய்தோ அல்லது திருத்தங்கள் செய்யாமல் மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் அதனை ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். இதனால், ஆளுநர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆளுநரின் அதிகாரம் சட்டப்பேரவையைக் கட்டுப்படுத்தாது என்பது தெரியவருகிறது.
ஆளுநர் மசோதாக்களை நிராகரிக்கும் அதிகாரம் இல்லை. அதனைத் திருப்பி சட்டப்பேரவைக்கு அனுப்பலாம். ஆனால், மீண்டும் சட்டப்பேரவையில் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் அதை ஆளுநர் திருப்பி அனுப்ப முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆளுநர் என்பவர் தேர்ந்தெடுக்கப்படாத மாநிலத்தின் தலைவர் என்பதால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்த மசோதாக்களை நிறைவேற்றாமல் நிலுவையில் வைத்து இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் இது போன்ற பிரச்சனைகள் இல்லை. இதே போல் தமிழ்நாடு தெலங்கானா மற்றும் கேரளா ஆகிய மாநில அரசுகளுக்குச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து உள்ளன. தெலங்கானா மாநிலம் தொடர்ந்த வழக்கில் 2023 மார்ச் 24ஆம் தேதி ஆளுநர் மசோதாக்களை விரைவாகப் பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் ஆளுநருக்குக் காலக் கெடுவை நீதிமன்றம் வழங்கவில்லை ஆனால் விரைவாக என்ற வார்த்தை நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆளுநருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பைக் கேரள ஆளுநர் அலுவலகம் படிக்குமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் பஞ்சாப் வழக்கின் தீர்ப்பைப் படித்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் முடிவுகளை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆளுநர் நிலுவையில் வைத்து சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டால் அதனை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் இல்லை எனத் தமிழ்நாடு அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றக்கொண்டுள்ளது.
ஆளுநர்கள் சட்டம் இயற்றும் அதிகாரம் மிகவும் குறைவு சட்டப்பேரவையிலுள்ள அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்று உச்ச நீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்துள்ளது. 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் 7 நீதிபதிகள் மற்றும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில் ஆளுநர் அமைச்சர்களின் குழு ஆலோசனையின்படி மட்டுமே செயல்பட முடியும். சுதந்திரமான அதிகாரம் ஆளுநருக்கு இல்லை மேலும் நிர்வாக அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் அதிகாரம் இந்திய அரசியல் அமைப்பு பிரிவு 163 (1)ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் அதிகாரத்தை விட ஆளுநர் அதிகாரம் மேலானது கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மசோதாவை நிறுத்தி வைப்பது மற்றும் திருப்பி அனுப்புவது ஆளுநரின் அதிகாரத்தை மீறியதாகப் பார்க்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஆளுநர் மசோதாவைத் திரும்ப அனுப்புவது அமைச்சர் குழுவின் ஆலோசனையின் படி செய்யப்பட வேண்டியது.