மகாராஷ்டிரா அரசியல் திருப்பம்:இரண்டு வாரத்திற்கும் மேலாகமகாராஷ்டிரா அரசியலில் நெருக்கடி நிலை நீடித்து வந்தது. ஆட்சியிலிருந்த முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியிலிருந்து அதிருப்தி தெரிவித்த, மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் போர்க்கொடி தூக்கினர்.
ஷிண்டேவுக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு அதிகரித்ததால், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி கவிழ்ந்தது. அந்த வகையில் மகாராஷ்டிர மாநில புதிய முதலமைச்சராக சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே நேற்று (ஜூன் 30) பதவியேற்றுக் கொண்டார். எதிர்க்கட்சி தலைவராகயிருந்த பாஜகவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதுபோன்ற பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு வித்தைகள் முதல்முறையல்ல. இதற்கு முன்னதாகவே 6 மாநில ஆட்சியை கவிழ்த்துள்ளது.
மத்திய பிரதேசம்:மத்தியப் பிரதேச மாநிலம் 2020ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா விலகுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகாவில் இணைந்தார். இதையடுத்து அவரது ஆதரவு சட்டப் பேரவை உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்தனர்.
இதனால் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்தது. முதலமைச்சர் பதவியிலிருந்து கமல்நாத் ராஜினாமா செய்தார். பாஜகவின் மாநில தலைவர் சிவராஜ் சிங் சவுகான் மத்தியப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றார்.
கர்நாடகா:கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் 2018ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 222 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. இதில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வென்றன. எந்த கட்சியும் பெரும்பான்மைக்கான இடங்களை பிடிக்கவில்லை என்றாலும், தனிப்பெரும் கட்சியாக பாஜகவின் எடியூரப்பா முதலைச்சராக பதவியேற்றார்.
இருப்பினும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது, காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்த ஆட்சியில் குமாரசாமி முதலமைச்சராக இருந்தார். ஆனால், அடுத்த சில மாதங்களில் காங்கிரஸ் கட்சியின் 12 சட்டப்பேரவை உறுப்பினர்களும், மதசார்பற்ற ஜனதா கட்சியின் 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் திடீரென்று பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். அதனடிப்படையில் பாஜக ஆட்சி அமைத்தது.
மேகாலயா: மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கு 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், சுயேட்சை 3 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயகக் கட்சி 6 இடங்களிலும் வென்றன. இதனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மைக்கு தேவையான 31 இடங்களை பிடிக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில், தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக ஐக்கிய ஜனநாயகக் கட்சி அறிவித்தது. இதனால் பாஜக கூட்டணிக்கு மேலும் 6 இடங்களில் கிடைத்தன. அந்த வகையில் பாஜக பெரும்பான்மைபெற்று, தனது ஆதரவு வேட்பாளர் கான்ராட் சங்மாவை முதலமைச்சராக்கியது.
கோவா: கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கு 2017ஆம் தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் 19 இடங்களிலும், பாஜக 14 இடங்களிலும் வெற்றி பெற்றன. இரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது. அப்போது தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்ததையடுத்து, கோவாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்து. அந்த வகையில், மனோகர் பாரிக்கர் முதலமைச்சராக பதவியேற்றார்.
மணிப்பூர்: மணிப்பூரில் 2017ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக 21 இடங்களிலும், காங்கிரஸ் 28 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பெற்றிருந்தாலும் ஆட்சியமைக்க முடியவில்லை. ஏனென்றால் காங்கிரஸ் கட்சியிலிருந்த விலகி பாஜகவில் இணைந்த பைரன் சிங், 28 தொகுதிகளில் வென்ற காங்கிரஸிலிருந்து பெரும்பான்மைக்கு தேவையான சட்டப்பேரவை உறுப்பினர்கள் தன் பக்கம் வரவழைத்து ஆட்சியமைத்தாா்.
அருணாச்சல பிரதேசம்:அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கு 2014ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் 44 இடங்களைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கூட்டணியிலிருந்து 33 சட்டப் பேரவை உறுப்பினர்கள் விலகி பாஜகவில் இணைந்தனர். அந்த வகையில் 41 உறுப்பினர்களுடன்பாஜக ஆட்சி அமைத்தது.
இதையும் படிங்க:மகாராஷ்டிர புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்பு!