ஐஸ்வால் (மிசோரம்): மிசோரம் மாநிலத்தில் ஆளும் கட்சியான மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி சோரம் மக்கள் இயக்கம் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
இந்தியத் தேர்தல் ஆணையம் டிசம்பர் 4ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 21 தொகுதிகளைக் கைப்பற்றவேண்டும்.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, ஆளும் கட்சியான மிசோ தேசிய முன்னணியை விட சோரம் மக்கள் இயக்கம் முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில் தற்போது, மிசோரம் மாநிலத்தின் 40 தொகுதிகளிலும் தேர்தல் முடிவுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி சோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களையும், மிசோ தேசிய முன்னணி 10 இடங்களையும், பாஜக 2 இடங்களையும், காங்கிரஸ் 1 இடத்தையும் கைப்பற்றி உள்ளது. இதன் மூலம் மிசோரம் மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையுடன் சோரம் மக்கள் இயக்கம் ஆட்சி அமைக்க உள்ளது.
சோரம் மக்கள் இயக்கம் மிசோரம் மாநிலத்தின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்துஹோமாவினால் உருவாக்கப்பட்டது. மிசோரம் மக்கள் மாநாடு, சோரம் தேசியவாதக் கட்சி, சோரம் எக்ஸோடஸ் இயக்கம், சோரம் அதிகாரப் பரவலாக்கல் முன்னணி, சோரம் சீர்திருத்த முன்னணி மற்றும் மிசோரம் மக்கள் கட்சி என ஆகிய ஆறு அமைப்புகள் ஒன்று இணைத்து சோரம் மக்கள் இயக்கக் கூட்டணி உருவாக்கப்பட்டது. அதன் பின் ஒருங்கிணைந்த அமைப்பாக மாறியது.