தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Sengol: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோல்.. வரலாறும், சர்ச்சையும்! - rajaji

"1947 ஆம் ஆண்டு நிகழ்ந்த அதிகாரப் பரிமாற்றத்தை நினைவுபடுத்தும்" ஆளுங்கட்சியின் ஒரு முயற்சியாக, புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் அறையில், பிரதமர் மோடி 'செங்கோல்' நிறுவி உள்ளார். இந்த செங்கோல் நிகழ்வு, தற்போது பேசுபொருளாக மாறி உள்ள நிலையில், அதன் வரலாற்றுத்தன்மை மற்றும் அது ஏற்படுத்தி உள்ள அரசியல் சர்ச்சை பற்றி, இங்கு விரிவாகக் காண்போம்.

Explained Story of Sengol political tugofwar surrounding installing it in new Parliament
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோல் - அதன் வரலாறு, அரசியல் சர்ச்சை குறித்து அறிவோமா?

By

Published : May 28, 2023, 1:29 PM IST

ஹைதராபாத்:செங்கோல் என்ற சொல், தமிழ் மொழியில் இருந்து தருவிக்கப்பட்டது ஆகும். முந்தைய காலங்களில், மன்னர்களின் முடிசூட்டு விழாவின் போது, பாரம்பரியமாக வழங்கப்பட்டு வந்ததால், செங்கோலுக்கு என்று பிரத்யேகமான வரலாற்று முக்கியத்துவம் உள்ளது. ஆங்கிலேயரிடமிருந்து, 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற நிலையில், இந்தியாவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டதை, குறிக்கும் வகையில், செங்கோல் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பழமையான சைவ ஆதீனங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீனம் விழாவை, தலைமையேற்று நடத்தினார். இந்த செங்கோலை, சென்னையைச் சேர்ந்த நகைக்கடை வியாபாரி உம்மிடி பங்காரு செட்டி அண்ட் சன்ஸ் வடிவமைத்து இருந்தனர். விழா முடிந்ததும், அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் செங்கோல் வைக்கப்பட்டது.

இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தின் தொடர்ச்சியை வலியுறுத்தும் வகையில், 1947ஆம் ஆண்டு அதிகாரப் பரிமாற்றத்தை நினைவுபடுத்தும் அடையாள நடவடிக்கையாக, திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து, செங்கோலை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மக்களவை சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் செங்கோலை நிறுவி உள்ளார்.

மத்திய அரசின் கூற்றுப்படி, செங்கோலின் வரலாறு 1947ஆம் ஆண்டில் நிகழ்ந்த அதிகார பரிமாற்றத்தின் சம்பிரதாய அம்சங்கள் குறித்த ஆய்வு, லார்ட் மவுண்ட்பேட்டனிடம் இருந்து துவங்குகிறது. இடைக்கால தமிழ் சாம்ராஜ்யங்களில் நடைமுறையில் இருந்த அதிகாரப் பரிமாற்றத்தை, சம்பிரதாய நிகழ்வாக மாற்றும் பாரம்பரியத்தை அறிமுகப்படுத்திய விதம் குறித்து, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சி.ராஜகோபாலாச்சாரியிடம் (ராஜாஜி) இதுகுறித்த ஆலோசனை கேட்டு இருந்தார். சங்க காலத்திலும் இடைக்கால சோழர் காலத்திலும் இந்த மரபு இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14ஆம் தேதி, திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைமை மடாதிபதி, நாதஸ்வரக் கலைஞர் மற்றும் பாரம்பரிய கோயில் பாடகர் (ஓதுவார்) ஆகியோருடன் இணைந்து, லார்ட் மவுண்ட்பேட்டனுக்கு செங்கோலை வழங்கினார். பின்னர் செங்கோல், புனித கங்கை நதியில் இருந்து பெறப்பட்ட நீரால் சுத்தம் செய்யப்பட்டு, நேருவின் இல்லத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது, அங்கு செங்கோல், நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது, இது ஆங்கிலேயர்களிடம் இருந்த அதிகாரம், இந்திய மக்களுக்கு மாற்றப்பட்டதை குறிக்கும் நிகழ்வாக அமைந்து உள்ளது. இந்த நிகழ்வை ஒட்டி, சிறப்பு பாடலும் இசைக்கப்பட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில், தற்போது, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு இடையே, செங்கோல் குறித்த சர்ச்சை எழுந்து உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, நாட்டின் முதல் குடிமகன் ஆன ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டுமே தவிர, அதை, பிரதமர் திறந்து வைக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் வாதிட்டு, இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை புறக்கணித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

“இந்தியா, ஆங்கிலேயரிடம் இருந்து, சுதந்திரம் பெற்ற நாளில், ஆங்கிலேயர்கள், நேருவிடம் செங்கோலை ஒப்படைத்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை” என்று, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார். செங்கோலின் அடையாளங்கள் தொடர்பான, லார்ட் மவுண்ட்பேட்டன், ராஜாஜி மற்றும் நேரு உள்ளிட்டோரின் கூற்றுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை என அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சிகளின் இந்த கருத்து "வெட்கக்கேடான அவமதிப்பு" என்றும், இந்தியாவின் கலாச்சாரத்தை அவமதிக்கும் வகையில் இது உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். 1947ஆம் ஆண்டில், ஆதினம் வழங்கிய செங்கோல், கைத்தடியாக மாற்றப்பட்டு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸின் கருத்துகளுக்கு, திருவாவடுதுறை ஆதினம் மறுப்பு தெரிவித்து உள்ளது. 1947ஆம் ஆண்டில், அதிகாரப் பரிமாற்றம் குறித்த சம்பிரதாய நிகழ்விற்கு, ராஜாஜி அழைக்கப்பட்டதற்கான ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதுதொடர்பான, குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய தனிநபர்களின் கருத்துக்களுக்கு திருவாவடுதுறை ஆதினம் வருத்தம் தெரிவித்து உள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், சபாநாயகர் இருக்கைக்கு அருகில், செங்கோலை நிறுவி இருக்கும், மத்திய அரசின் முடிவு, அரசியல் பார்வையின்படி, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விரைவில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, தமிழ்நாட்டில், பாரதிய ஜனதா கட்சி, தனது இருப்பை வலுப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையிலான கலாச்சார மற்றும் நாகரீக தொடர்புகளை நிலைநிறுத்தும் பொருட்டு நடைபெற்ற காசி-தமிழ் சங்கமம் நிகழ்வின் தொடர்ச்சியாக, சபாநாயகர் இருக்கைக்கு அருகில், செங்கோலை நிறுவி இருக்கும் நிகழ்வை நாம் பார்க்க முடிகிறது.

இதையும் படிங்க: New Parliament: புதிய நாடாளுமன்றத்தின் 10 சிறப்பம்சங்கள்!

ABOUT THE AUTHOR

...view details