தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

AI துறையில் பின்தங்கியுள்ள இந்தியா - வளர்ச்சிபெற வேண்டியதன் அவசியம் என்ன? - மத்திய அரசு

Artificial Intelligence for Economic Growth: செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி மற்றும் அதன் மீதான தேடலில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதன் முக்கியத்துவம் மற்றும் தேவை என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

By UNI (United News of India)

Published : Sep 12, 2023, 6:03 PM IST

சென்னை: உலக அளவில் மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI) மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசு சார் நிறுவனங்கள் மட்டும் இன்றி, தனியார் துறையிலும் செயற்கை நுண்ணறிவு (AI) -வின் தேவை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி இருக்கிறது. அமெரிக்கா, சீனா , ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.

அதேபோல, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து அதற்கான தேடலில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் அதே நேரம் இந்தியா, இந்த துறையில் தனது பங்கீட்டை கணிசமான அளவு மட்டுமே வழங்கி வருகிறது எனவும், செயற்கை நுண்ணறிவு (AI) எந்த அளவிற்கு பலனளிக்கிறது என்பதை ஆய்வு செய்து கண்டறிய வேண்டும் எனவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், இந்த துறையில் விரிவான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் தேவை எனவும், வரும் காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு (AI)-வின் பங்கு அலாதியானது எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதற்கு மத்திய, மாநில அரசுகள் தனித்துவமான முக்கியத்துவம் வழங்கி, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து ஆய்வுகளை தீவிரப்படுத்துவதும், கண்டுபிடிப்புகளை வெற்றி பெற செய்வதும் தொழில்நுட்பத்துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

பிரபல தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமம் நாட்டின் தேவையை அடிப்படையாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு (AI) கண்டுபிடிப்புகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், இரண்டு சூப்பர் கம்பியூட்டர் திறன்களுடன் கூடிய ஒரு ஆய்வகத்தை நிறுவி, செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வுப் பணிகளில் ரிலையன்ஸ் குழுமம் தீவிரம் காட்டி வருகிறது.

மேலும், இந்த துறையின் வளர்ச்சிக்கு டெக் மஹிந்திரா மற்றும் ஐஐடி மெட்ராஸ் போன்ற இந்திய நிறுவனங்களின் ஒத்துழைப்பு, சிறப்பான கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகிறது. இந்திய அளவில், செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் வளர்ச்சி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், வருமான உயர்வு, மக்களின் வாழ்வில் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டும் இன்றி, அறிவியல் ஆராய்ச்சி, மருத்துவத்துறையில் நோய் கண்டறிதல், நோயின் தீவிரத்தை கண்டுபிடித்தல், அதேபோல அரசாங்க திட்டங்களை வழிநடத்துதல், அதில் குளறுபடிகள் இல்லாமல் தடுத்தல், தனியார் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தேவை உள்ளிட்ட பல விஷயங்களில் மாபெரும் மாற்றத்தை செயற்கை நுண்ணறிவு (AI) கொண்டு வந்துள்ளது.

அதேபோல நெதர்லாந்து நாட்டில் அரசின் நலத்திட்டங்களை தவறாக பயன்படுத்தும் நபர்களை கண்டறிய செயற்கை நுண்ணறிவை (AI) அந்நாட்டு அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகளாவிய தேவையிலும், தேடலிலும் செயற்கை நுண்ணறிவு (AI) மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியா அதன் ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் அனைத்து துறைகளிலும் இந்தியா வேகமாக வளர்த்து வருகிறது. அதே நேரம் தொழில்நுட்ப வளர்ச்சியோடு தொடர்புடைய செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் சாதாரண தலையீட்டை மட்டுமே இந்தியா வழங்கி வருகிறது எனவும் இது எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கேள்விக்குறியாக்கி விடும் எனவும் தொழில்நுடப் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாக செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் வேகமாக ஓட வேண்டும் என தெரிவித்துள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள், பிற நாடுகளுக்கு முன்மாதிரியான கண்டுபிடிப்புகளை இந்தியா கண்டறிய வேண்டும் எனவும் இது நாட்டின் பொருளாதாரம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வளர்ச்சி அடையச் செய்யும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஐஐடி மெட்ராஸின் பேராசிரியருக்கு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது!

ABOUT THE AUTHOR

...view details