இந்தியாவில் தொற்றுநோயின் இரண்டாவது அலை தென்னாப்பிரிக்க, இங்கிலாந்து மற்றும் பிரேசிலிய வகையை சேர்ந்த வைரஸாகும். கரோனா தொற்று மக்களிடம் பரவும் போது, இன்னும் பல ஆபத்தான பிறழ்வுகளுக்கு ஆளாகிறது. கரோனாவின் முதல் அலையில் வெளிப்பட்ட நோய் அறிகுறிகளுக்கு மாறாக, இந்த முறை நோயாளிகள் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு விரைந்து வருகின்றனர்.
தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து இரண்டு மீட்டர் தூரம் வரை வைரஸ் பரவ முடியும் என்றும், அதிக வைரஸ் பாதிப்பு உள்ள நபரிடமிருந்து வைரஸ் காற்று வழியாக பரவுகிறது என்றும் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (CCMB) தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் எச்சரித்துள்ளனர். மூக்கு மற்றும் வாய் தவிர, வைரஸ் மனித உடலில் கண்கள் வழியாகவும் ஊடுருவி வருகிறது.
பல போர்களால் ஏற்படும் பெரிய அளவிலான சமூக-பொருளாதார பேரழிவை கடந்த ஆண்டில் தொற்றுநோய் ஏற்படுத்தி சென்றது. அதன் இரண்டாவது அலை இன்னும் அதிக சவாலாக உள்ளது, வேறு வழியில்லாமல், மகாராஷ்டிரா ஊரடங்கை அறிவித்தது, டெல்லியும் அதனை பின்பற்றியது. உ.பி.யில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கை அமல்படுத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாட்டில் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் பற்றாக்குறை உள்ளது. ஆக்ஸிஜன் வழங்கல், தடுப்பூசி மற்றும் மருந்து உற்பத்திக்கு மத்திய அரசு உறுதியளித்தாலும், தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால் பொதுமக்கள் செயல்பட வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கரோனா தொற்றுக்கான வாய்ப்புகளை 70 விழுக்காடு தவிர்க்கலாம்.
கரோனா தொற்று உலகம் முழுவதும் 13 கோடி மக்களை பாதித்துள்ளது. இது 30 லட்சம் மக்களின் உயிரைப் பறித்தது. தடுப்பூசி உற்பத்தி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு 70 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இன்னும் வைரஸ் அதன் புதிய பிறழ்வுகளால் மனிதகுலத்தை தொடர்ந்து அச்சுறுத்துகிறது. பயங்கரமான வைரஸைக் கட்டுப்படுத்த ஒரு விரிவான தடுப்பூசிக்கான ஆராய்ச்சி தொடர்கிறது. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளது. இருப்பினும், மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களால் செய்யவேண்டிய முதல் விஷயம், மக்களின் மனதில் இருக்கும் அச்சங்களை அகற்றுவதாகும். தடுப்பூசிக்குப் பிறகு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும், நோயாளியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது என்ற செய்தி மக்களைச் சென்றடைய வேண்டும்.
முகக்கவசங்களை தவறாமல் அணிவது, கைகளை சுத்தம் செய்வது போன்ற கரோனாவை எதிர்த்து போராடுவதற்கான சிறந்த மருத்துவ நடைமுறையைப் பற்றி அனைவருக்கும் தெரியும். மற்றவருடன் தொடர்பு கொள்ளும்போது ஒவ்வொருவரும் இரண்டு அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவற்றை பின்பற்றுவதன் மூலம் கரோனா தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தலாம்.
தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் தென் கொரியர்கள் ஒரு சுவாரஸ்யமான வழிமுறையை பின்பற்றுகின்றனர். அவர்கள் வேலையை வலது மற்றும் இடது கைகளுக்கு இடையில் பிரித்துள்ளனர். இந்த நடைமுறையின் படி, முகக்கவசத்தை சரிசெய்தல், கண்களை தேய்த்தல் போன்றவற்றை வலது கையால் அவர்கள் செய்கிறார்கள். கதவைத் திறப்பது, பணம் கொடுப்பது, எடுப்பது போன்ற செயல்களுக்கு அவர்கள் இடது கையைப் பயன்படுத்துகிறார்கள்.
கரோனா தொற்றின் முதல் அலை குறைந்தபின் மக்களிடையே ஏற்பட்ட அலட்சியம் இந்த இரண்டாவது அலையின் எழுச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது. தொற்றுநோயால் ஏற்படும் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் அனைவரும் தவறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.
இதையும் படிங்க: 'கரோனா 2ஆவது அலையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்'