ஹைதராபாத்: தமிழ்நாட்டைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பதக்கங்களை குவித்தவர். டேபிள் டென்னிஸ் விளையாட்டில் உலகத் தரவரிசைப் பட்டியலில் டாப் 25 இடங்களுக்குள் முன்னேறிய முதல் இந்திய வீரர் சத்யன்தான்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அண்மையில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றார். டேபிள் டென்னிஸ் உலகில் பல மேடு பள்ளங்களை சந்தித்தவர்.
இந்த நிலையில், தான் ஒரு கட்டத்தில் விளையாட்டை விட்டே வெளியேற நினைத்ததாக சத்யன் தெரிவித்துள்ளார். தனது பயணம் குறித்து ஈடிவி பாரத்திற்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
பெரிய போட்டிகளில் விளையாடுவதால் மன வலிமை அதிகரிக்கிறது...டேபிள் டென்னிஸ் போட்டிகளில் தான் சந்தித்த வெற்றி தோல்விகள் குறித்து கூறும்போது, "ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையிலும் வெற்றி தோல்விகள் என்பது ஒரு அங்கமாக இருக்கும். நிச்சயமாக நானும் வெற்றி தோல்விகளை பார்த்திருக்கிறேன். அதில் தோல்விகளில் இருந்து மீண்டு வருவதுதான் எனது பலம் என்று எப்போதும் கருதுகிறேன். ஆம், நான் மிகவும் கடுமையான தோல்விகளில் இருந்து மீண்டு வந்திருக்கிறேன், அப்போது மேலும் வலிமையாக மாறினேன்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் கிடைத்த தோல்வியில் இருந்தும் கற்றுக் கொண்டேன். அதற்குப் பிறகான போட்டிகளில் நான் நன்றாக விளையாடினேன். ஒலிம்பிக்கில் தோல்வியடைந்ததால் நாட்டு மக்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். ஆனால், தோல்வியின்போது சோகமாக இருப்பதைக் காட்டிலும், எங்கே தவறவிட்டோம் என்பதை கண்டறிந்து சரிசெய்வது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன்.
வீரர்களாகிய நாங்கள் எப்போதும் எங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறோம். தோல்விகளில் மட்டுமல்ல வெற்றிகளில் இருந்தும் கற்றுக் கொள்கிறோம். வெற்றிளுக்கான காரணிகளையும் கண்டறிந்து அதைப் பின்பற்ற முயற்சிக்கிறோம். வெற்றி, தோல்விகள் இரண்டுமே கற்றுக் கொள்வதற்கான முக்கியமான தருணம்தான். குறிப்பாக தோல்விகள் அதிகமாக கற்றுத்தருகின்றன.
நான் தொடர்ந்து கற்றுக்கொள்பவன், விளையாட்டில் எப்பொழுதும் புதிய டெக்னிக் எதையாவது கொண்டு வர நினைக்கிறேன். அதேபோல் வெற்றி தோல்வி குறித்து கவலைப்படாமல் சிறப்பாக விளையாட நினைக்கிறேன், அது உண்மையில் எனக்கு பலமாக அமைந்தது. பெரிய போட்டிகளில் விளையாடுவதால் மன வலிமை அதிகரிக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் எனக்கு மன வலிமையை அளித்துள்ளது. அது, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாட எனக்கு உதவியது" என்றார்.
விளையாட்டை விட்டு வெளியேற நினைத்தேன்...நீங்கள் சந்தித்த மோசமான தோல்வி எது? அதை எப்படி சமாளித்தீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "நான் உண்மையில் மோசமான தோல்வியை சந்தித்தேனா என்று எனக்குத் தெரியவில்லை. கடந்த சில ஆண்டுகளில் எனது ஆட்டங்கள் மிகவும் சீராகவே உள்ளன. ஒன்றிரண்டு மோசமான தோல்விகள் உள்ளன, ஆனால் ஒரு சேர பல மாதங்களோ அல்லது பல போட்டிகளிலோ மோசமாக நான் விளையாடியது இல்லை.
நான் தொடர்ந்து என்னை மேம்படுத்திக் கொள்வதற்கான வேலைகளை செய்து வந்திருக்கிறேன். உடற்பயிற்சி, உணவுமுறை என அனைத்திலும் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும், அவை விளையாட்டுகளில் தொடர்ந்து செயல்திறனை அதிகரிக்க உதவும். ஆனால், இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று என்னவென்றால், ஜூனியரிலிருந்து சீனியராக மாறுவது. அந்த மாற்றத்திற்கு சில காலம் எடுக்கும்.
நான் ஜூனியராக இருந்தபோது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். ஆனால், 2012 காலங்களில் நான் பொறியியல் படித்துக் கொண்டிருந்தேன். படிப்பு மற்றும் விளையாட்டை கையாள தெரியாமல் குழம்பினேன். இதனால் நான் ஆடவர் பிரிவில் நுழைந்தபோது என்னால் சிறப்பாக ஆட முடியவில்லை. அதனால், விளையாட்டை விட்டுவிட்டு படிப்பில் முழு கவனம் செலுத்தலாம் என்று கூட நினைத்திருக்கிறேன். பிறகு நான் அதை கையாள கற்றுக் கொண்டேன்" என்றார்.
இதையும் படிங்க: தனி விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டார் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்