டெல்லி:டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது. அதேபோல், இந்தோ ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சமீர் மகேந்திரு, குருகிராமில் உள்ள பட்டி ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் அமித் அரோரா, இந்தியா அஹெட் நியூஸ் நிர்வாக இயக்குநர் மூதா கவுதம் உள்ளிட்ட பலரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த மதுபானக் கொள்கை தொடர்பான வழக்குகளில், சமீர் மகேந்திரு, ஆம்ஆத்மி பிரமுகர் விஜய் நாயர், ஹைதராபாத் தொழிலதிபர் அபிஷேக் போயின்பல்லி ஆகியோர் மத்திய ஏஜென்சிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான விசாரணைக்காக நாளை(அக்.17) நேரில் ஆஜராகும்படி, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நாளை காலை 11 மணிக்கு சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.