ஐதராபாத்: பொதுவாக நம் வீடுகளில் கர்ப்பமாக இருப்பவர்களிடம் இப்போது நீ ஒரு உயிர் அல்ல 2 உயிர், இரண்டுக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும், அப்போது தான் குழந்தையும் ஆரோக்கியமாகப் பிறக்கும் எனக் கூறி அதிக உணவை வழங்குவார்கள். அவ்வாறு கர்ப்பகாலத்தின் போது பெண்கள் எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான உணவு அவர்களது எடையை அதிகரிக்கும். ஆனால் இந்த திடீர் எடை அதிகரிப்பு தாய்மார்களுக்குப் பிற்காலத்தில் ஆபத்தையும் ஏற்படுத்தும் என்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.
கர்ப்ப காலத்தில் அதிக எடை அதிகரிப்பின் தாக்கம் பொதுவாகக் குழந்தை பிறப்பதற்கு பிறகான எடை தக்கவைப்பு மற்றும் கர்ப்பகால நீரிழிவு, கர்ப்பத்தால் தூண்டப்பட்ட உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை தேவைப்படும் அதிக வாய்ப்பு போன்ற சிக்கல்களுடன் தொடர்புடையது. ஆனால், அதன் நீண்டகால தாக்கங்கள் குறித்து இதுவரை நாம் அறிந்ததில்லை. இந்நிலையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (NUS மருத்துவம்) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அந்த ஆராய்ச்சியில் சாதாரண மற்றும் அதிக உடல் எடை (பாடி மாஸ் இண்டெக்ஸ் (BMI)) உள்ள பெண்களுக்குக் கர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பானது, மற்ற காரணங்களால் ஏற்படும் இறப்பு காரணிகளில் 9 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை தொடர்புடையது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புகளானது தி லான்செட்டில் வெளியிடப்பட்டன.
இதையும் படிங்க: குற்றாலம் மெயின் அருவில் வெள்ளப் பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!
கர்ப்ப காலத்தில் ஏற்படும் எடை அதிகரிப்பு, எடை இழப்பு, மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளை ஆராய்ச்சியாளர்கள் 46,000க்கும் மேற்பட்ட பெண்களின் தரவுகளைக் கொண்டு மதிப்பிட்டுள்ளனர். அதன்படி, கர்ப்பத்திற்கு முந்தைய காலத்தில் (பாடி மாஸ் இண்டெக்ஸ் (BMI)) குறைவான எடை மற்றும் சாதாரண எடை உள்ள பெண்களுக்குக் கர்ப்பகாலத்தின் போது ஏற்படும் அதிக எடை அதிகரிப்பானது இதய நோய்களால் ஏற்படும் இறப்புக்கு 84 சதவீதம் மற்றும் 20 சதவீதம் வரை அதிகரிக்க வழிவகுப்பதாக ஆய்வுகள் கூறியுள்ளது.