தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராக்கெட்ரி சினிமாவில் இஸ்ரோ குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள 90% தகவல்கள் தவறானவை... எழுந்தது குற்றச்சாட்டு... - ஈவிஎஸ் நம்பூதிரி

மாதவன் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி திரைப்படத்தில், இஸ்ரோ குறித்தும், முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் குறித்தும் தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ISRO
ISRO

By

Published : Aug 25, 2022, 7:08 PM IST

திருவனந்தபுரம்: நடிகர் மாதவன் இயக்கி, தயாரித்த திரைப்படம் "ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்". இப்படத்தில் மாதவன் நாயகனாகவும் நடித்துள்ளார்.

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ராக்கெட்ரி திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், ராக்கெட்ரி திரைப்படத்தில் நம்பி நாராயணன் குறித்தும், இஸ்ரோ குறித்தும் பல்வேறு தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக, நம்பி நாராயணனுடன் பணிபுரிந்த முன்னாள் விஞ்ஞானிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் முத்துநாயகம், சசிகுமரன், நம்பூதிரி உள்ளிட்டோர் திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், "ராக்கெட்ரி திரைப்படத்தில் இஸ்ரோ குறித்த தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதால், அதுகுறித்த உண்மையை மக்களுக்கு கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் பல விண்வெளி திட்டங்களுக்கு நம்பிநாராயணன்தான் தந்தை என்று குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறு.

அப்துல் கலாமின் தவறை நம்பிநாராயணன் திருத்தியதாக குறிப்பிட்டுள்ளதும் தவறு. நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டதால்தான், இந்தியாவில் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் தாமதம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது, அதுவும் தவறு.

இந்தியாவில் 1980-களில் இஸ்ரோ கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தை உருவாக்கத் தொடங்கியது. இத்திட்டத்திற்கு ஈவிஎஸ் நம்பூதிரி பொறுப்பாளராக இருந்தார். நம்பி நாராயணனுக்கும் இந்தத் திட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்படத்தில் இஸ்ரோ குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள 90 விழுக்காடு தகவல்கள் தவறானவை. இப்படத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மை என நம்பி நாராயணன் தொலைக்காட்சிப் பேட்டிகளில் கூறியுள்ளார்.

பிற விஞ்ஞானிகளின் சாதனைகளை தன்னுடையது என நம்பி நாராயணன் கூறிக் கொள்கிறார். இதனை ஏற்க முடியாது" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க:பெண் குழந்தையைக் காப்போம் என்பவர்களே, பாலியல் வன்புணர்வாளர்களை காப்பாற்றுகிறார்கள்... ராகுல் காந்தி...

ABOUT THE AUTHOR

...view details