டெல்லி:பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பாஜக நிறைவேற்றியது. நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மசோதாவை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு மனுக்களை விசாரித்தது. மசோதாவுக்கு 3 நீதிபதிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் இரு நீதிபதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் 10 சதவீத இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய திமுக தலைமையிலான அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. சீராய்வு மனுவில் 10 சதவீத இட ஒதுக்கீடு 133 கோடி மக்களுக்கு எதிராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.