நாடு முழுவதும் கரோனா பரவல் தீவிரமாகிவரும் நிலையில், கரோனா தடுப்பூசி விநியோகத்தின் மூன்றாம் கட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மே 1ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரவுள்ளது. இம்முறை 50 விழுக்காடு தடுப்பூசிகளை மாநில அரசு நேரடியாக கொள்முதல் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய மருந்துகள் ஆய்வகத்தின் மூலம் 50 விழுக்காடு தடுப்பூசிகளை தயாரிப்பாளர்கள் மத்திய அரசுக்கு விநியோகிப்பார்கள். மீதமுள்ள 50 விழுக்காடு தடுப்பூசிகளை மாநில அரசுகள் நேரடியாக வாங்கிக் கொள்ளலாம்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் நாட்டின் முன்னணி மருத்துவர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை 4:30 மணி அளவில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, "கடந்த ஓராண்டாக, குறுகிய காலகட்டத்தில் கரோனா தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்த மத்திய அரசு கடுமையாக உழைத்துவருகிறது. கரோனா தடுப்பூசி குறித்து மக்களுக்கு மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
இதைத் தொடர்ந்து, மாலை 6 மணி அளவில் கரோனா நிலை குறித்து மருந்து நிறுவனங்களின் தயாரிப்பாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். மருத்துவர்கள், முன்களப்பணியாளர்களின் தன்னலமற்ற சேவையை பிரதமர் மோடி பாராட்டினார். இதனைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, கரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு தங்களின் பங்கிலிருந்து தடுப்பூசிகளை வழங்கவுள்ளது. தடுப்பூசியை விரயமாக்கும் மாநிலங்களுக்கு தடுப்பூசியின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.