டெல்லி: பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முக்கிய பங்கு வகித்து வந்திருந்தாலும், அவர் இல்லாதது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு இடையூறாக இருக்காது என்று திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜவஹர் சிர்கார் கூறுகையில், "இதுபோன்ற தகுதி நீக்க சம்பவங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது.
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் ராகுல் காந்தி முக்கிய காரணியாக இருந்தபோதிலும், அவர் இல்லாதது எங்களது ஒற்றுமைக்கு இடையூறை ஏற்படுத்தாது. எதிர்க்கட்சிகளின் எந்த கோரிக்கைகளை பற்றியும் விவாதிக்க, ஆளும் கட்சி ஆர்வம் காட்டுவதில்லை. இருப்பினும் தகுதி நீக்கத்தை கண்டித்து தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்" என்று தெரிவித்தார்.
இதே கருத்தையே பாரத ராஷ்டிர சமிதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே. கேசவ ராவ்வும் தெரிவிக்கிறார். அவர் கூறுகையில், "ராகுல் காந்தி இல்லாத போதும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. எங்களுக்கு காங்கிரஸ் காட்சி உடன் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும், நாட்டில் ஜனநாயகம் பறிக்கப்படும்போது, ஒற்றுமை பலத்துடன் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளோம். காங்கிரஸ் முகம் ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.
மோடி என்பது சமூகத்தின் பெயராக இருந்தாலும், ராகுல் காந்தி மோடியை விமர்சித்தது ஒரு சமூகத்தை விமர்சித்ததாக நாம் கருதக்கூடாது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால், பாஜக அரசு எதிர்க்கட்சிகளை அழிக்கவும், கருத்து தெரிவிக்காமல் கட்டுப்படுத்தவும் பாசிச கொள்கையை கடைபிடித்து வருகிறது" எனத் தெரிவித்தார்.