ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் துண்டிக்கல் நகர் அருகே உள்ள விமானப்படை அகாடமியில் இன்று (டிச.19) பட்டமளிப்பு அணிவகுப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "பாகிஸ்தான் தனது கொடிய செயல்களைத் தொடர்ந்து வருகிறது. இந்தியாவுடன் நடைபெற்ற நான்கு போர்களிலும் தோல்வியை தழுவியப் பின்னரும், பயங்கரவாதம் மூலம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளை முறியடித்த பாதுகாப்பு படையினரின் செயல் பாராட்டத்தக்கது.
இந்திய விமானப் படைக்கு போற்றத்தக்க வரலாறு உண்டு. விமானப்படை தனது துணிவை காட்ட ஒருபோதும் தயங்கியதில்லை. 1971ஆம் ஆண்டு லங்கேவாலா போர் முதல் பாலக்கோட் வான்வழித் தாக்குதல் வரையிலான அனைத்தும் இந்திய நாட்டின் தங்க அத்தியாயங்கள்.
மிகுந்த விழிப்புடன் நமது பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை எதிர்கொண்டு வருகின்றனர். நமது நாட்டில் மட்டுமல்லாது எல்லையை தாண்டியும் சிறப்பாக செய்பட்டுள்ளனர். உலக நாடுகளுக்கு இந்தியாவின் திறனைக் காண்பிக்கும் வகையில், பாலக்கோட்டில் நடத்தப்பட்ட இந்திய விமானப் படையின் வான் வழித் தாக்குதல் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது" எனத் தெரிவித்தார்.